ஆர்.கே.நகரில் வெற்றிபெற்றது போல தினகரனின் மோடி மஸ்தான் வேலைகள் இனி எடுபடாது என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். சசிகலா ஜெயலலிதாவுடன் இருக்கும் போதிலிருந்தே அவரையும் அவரது குடும்பத்தினரையும்  நேரடியாக எதிர்த்து வந்தவர்களில் அமைச்சர் சி.வி.சண்முகமும் ஒருவர். கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தபோதும் வேலுமணி, தங்கமணியை தொடர்ந்து தினகரனை எதிர்த்து நேரடியாக கேள்விகள் கேட்டவர் சண்முகம். அந்த வகையில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினரை அப்போதிலிருந்தே போட்டுத்தாக்கி வருகிறார். 

சி.வி.சண்முகத்துக்கு கவுண்ட்டர் கொடுக்கும் வகையில் டிடிவி தினகரனும் அவ்வப்போது வலுவான எதிர்கருத்துக்களைத் தெரிவிப்பார். இந்த நிலையில்தான் இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போதும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு ‘தேர்தல் நடைபெற்றால் 20 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.

மேலும் ஆர்.கே.நகர் என்னும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றிபெற்றுவிட்டு வாய்கிழியப் பேசும் தினகரனின் மோடிமஸ்தான் வேலைகள் இனி எடுபடாது’ என்றார் சி.வி.சண்முகம்.