Dr.Ramadoss statement
கட்-அவுட் விதிகளை காற்றில் பறக்கவிட்ட அமைச்சர்கள் !! கடும் நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல் !!!
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி கட்-அவுட், பதாகைகள் வைத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட் மற்றும் பதாகைகளை அமைக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு அடுத்த நாளே அதுகுறித்த விதிகள் மீறப்பட்டிருக்கின்றன. சென்னைக்கு அருகிலும், திருச்சியிலும் அரசு விழாவுக்காக விதிகளை மீறி ஏராளமான கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
.சென்னையை அடுத்த திருப்பெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் வானூர்தி உதிரிபாக தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று பூந்தமல்லி முதல் திருப்பெரும்புதூர் வரை பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. பெரும் காற்றுடன் மழையும் பெய்ததால் பல இடங்களில் பதாகைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்..
தமது படத்துடன் பதாகைகளை அமைப்பது உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்பதால், முதலமைச்சரே அதிகாரிகளை அழைத்து பதாகைகளை அகற்றும்படி ஆணையிட்டிருக்க வேண்டும். அதுதான் சட்டத்தை மதிக்கும் முதலமைச்சருக்கு அழகாகும். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ சாலையோரங்களில் தமது படத்துடன் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை பார்த்து ரசித்தபடியே விழாவுக்கு சென்று திரும்பினார் என குற்றம்சாட்டியுள்ளார்..
இதே போன்று திருச்சியிலும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டது. திருச்சியில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக திருச்சி நகருக்குள் வருவதற்கான அனைத்து சாலைகளிலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோரின் கட்-அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாழும் தலைவர்களுக்கு கட்&அவுட் அமைக்கக்கூடாது; பொது இடங்களில் சுவர்களை அசுத்தப்படுத்தக் கூடாது என்பது தான் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு ஆகும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராசன், வளர்மதி, துரைக்கண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெயர்களில் பதாகைகளும், கட்-அவுட்களும் அமைக்கப்பட்டுள்ளன.
.உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் உயிருடன் இருப்பவர்கள் பெயரில் கட்-அவுட், பதாகைகள் வைத்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் மீதும், அதை தடுக்கத்தவறிய தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
