ஊரடங்கை தளர்த்திய பிறகு மீண்டும் கொரோனா தொற்று தலைதூக்கும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்.பி. ராகுல் காந்தி வீடியோ கான்பரன்ஸ் முறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது ராகுல் கூறியதாவது;- ஊரடங்கால் கொரோனா பரவுவது குறையலாமே தவிர நிரந்தரமாக ஒழித்திட முடியாது. ஊரடங்கு என்பது தற்காலிகமான முடிவு தான். ஊரடங்கு முடியும் போது, கொரோனா மீண்டும் பரவ துவங்கும். ஆகையால், கொரோனா தொற்று பரிசோதனையை நாடு முழுவதும் விரிவுப்படுத்த வேண்டும். 


பரவலான கொரோனா சோதனையை அரசு மேற்கொள்ள வேண்டும் என ராகுல் கோரிக்கை வைத்துள்ளார். சோதனை தீவிரப்படுத்துவது தான் கொரோனா தடுப்புக்கு தீர்வாகும். மாநில மற்றும் மாவட்ட அளவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெரிய நெருக்கடியை மத்திய அரசு தள்ளிப்போட்டுள்ளது. கேரளா மாநிலம் கொரோனா தடுப்பை வெற்றிகரமாக கையாண்டு வருகிறது. 10 லட்சம் பேருக்கு 199 என்ற விகிதத்திலேயே இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 


கொரோனா பரிசோதனையை விரிவுபடுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். வேலையின்மை பிரச்சனையை சமாளிக்க மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும். சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுடைய பிரச்சனையை கவனத்துடன் தீர்க்க வேண்டும் எனஅவர் வலியுறுத்தியுள்ளார்.


ஏழைகளுக்கு உணவு கிடைப்பதை அரசு உத்தவாதம் செய்ய வேண்டும். நிறைந்து வழியும் இந்தியாவின் தானியக்கிங்குகளில் இருந்து ஏழைகளுக்குஉணவு அளிக்க வேண்டும். அடுத்து வரும் மாதங்களில் நாடு பெரும் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். ஜிஎஸ்.டி வரி வருவாயை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.