மே 31ம் தேதி வரை ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார். 

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 4 கட்டங்களாக நீட்டிக்கப்பட்ட இந்த ஊரடங்கு தற்போது 60 நாட்களை கடந்துள்ள நிலையில், மே 31ம் தேதியோடு முடிவடைகிறது. மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட போதிலும், வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்தபாடில்லை. இருப்பினும், கடந்த 14-ம் தேதி முதல் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 17,728 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 9,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 127-ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 11,640 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு வருகிற 31ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில் நேற்று மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு எந்த தளர்வும் அறிவிக்கக்கூடாது.  மேலும், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் குழு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் வெள்ளிக்கிழமையன்று  காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம் கேட்டறிந்த பின் பொது முடக்கம் குறித்து முதல்வர் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.