கடலூர் திமுக என்றால் இப்படியா.? ஒரு பக்கம் எம்.பி.. இன்னொரு பக்கம் எம்எல்ஏ.. ஸ்டாலினுக்கு கண்ணாமூச்சி ஆட்டம்!
தலைமையின் ‘கட்டுப்பாட்டை’ மீறி, ‘கண்ணிய’த்துக்கு குந்தகம் விளைவித்ததால், நடவடிக்கை எடுத்து தன் ‘கடமை’யை செய்திருக்கிறது திமுக.
கடந்த ஆண்டு கடலூர் திமுக எம்.பி. கொலை வழக்கில் சிக்கியது கட்சிக்கு அவப்பெயரான நிலையில், இந்த ஆண்டு கடலூர் எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கப்படும் அளவுக்கு செயல்பட்டிருப்பது பரபரப்பாகியுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கடலூரில் திமுக சார்பில் போட்டியிட்டு ரமேஷ் என்பவர் வெற்றி பெற்றார். இவருடைய முந்திரி கம்பெனியில் வேலை பார்த்த ஊழியரை கொலை செய்ததாக எழுந்தப் புகாரில் ரமேஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை வைத்து அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சித்தன. மேலும் ரமேஷ் தலைமறைவானதாகக் கூறப்பட்ட நிலையில், பின்னர் கைது செய்யப்பட்டார். கடலூர் திமுக எம்.பி.யின் இந்த விவகாரத்தால் திமுகவுக்கு கெட்டப் பெயர் ஏற்படும் சுழல் ஏற்பட்டது. திமுக எம்.பி.யால் இப்படி ஒரு நிலை கட்சிக்கு ஏற்பட்டது என்றால், தற்போது கடலூரில் உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தலில் திமுக குறுகி நிற்கும் சூழல் எம்.எல்.ஏ.வால் ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இருந்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கடந்த 4ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டி வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்றார். இதேபோல, கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக தலைமை சுந்தரி என்பவரை அறிவித்தது. ஆனால், சுந்தரி மீதான அதிருப்தியால் திமுக மாவட்ட பொருளாளர் குணசேகரின் மனைவி கீதாவும் தேர்தலில் மாற்று வேட்பாளராக போட்டியிட்டார். இந்தப் பின்னணியில் கடலூர் திமுக எம்எல்ஏ அயப்பன் இருந்ததாக கூறப்படுகிறது.
தேர்தலில் சுந்திரி வெற்றி பெற்றார். கீதா குணசேகரன் 12 வாக்குகள் பெற்று 7 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். திமுக தலைமையின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால் தலைமை அதிருப்தி அடைந்தது. மேலும் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களில் களமிறங்கி வெற்றி பெற்ற திமுகவினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தன்னை வந்து சந்திக்கும்படி திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி செய்யாதவர்கள் மீது திமுக தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கடலூர் எம்.எல்.ஏ. கோ. அய்யப்பனை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது திமுக தலைமை.
தலைமையின் ‘கட்டுப்பாட்டை’ மீறி, ‘கண்ணிய’த்துக்கு குந்தகம் விளைவித்ததால், நடவடிக்கை எடுத்து தன் ‘கடமை’யை செய்திருக்கிறது திமுக. இப்போது தலைப்பை ஒரு முறை படித்துப் பாருங்கள்!