விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே இருக்கிறது சிறுமதுரை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ(15). பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர் தற்போது கொரோனா விடுமுறை காரணமாக வீட்டில் இருந்துள்ளார். அவரது பெற்றோர் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டிலிருந்து தீ புகை வெளிவந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வீட்டில் சென்று பார்த்தபோது ஜெயஸ்ரீயின் உடல் தீயில் எரிந்து கொண்டிருந்தது. பதறிப்போன அவர்கள் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஜெயஸ்ரீயை கொண்டு சென்றனர்.

தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஜெயஸ்ரீயிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றதில், வீட்டில் தனியாக இருந்த தன்னை அப்பகுதியைச் சேர்ந்த முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரும் சேர்ந்து கை கால்களை கட்டி போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக தெரிவித்தார். இதனிடையே பலத்த தீக்காயம் அடைந்த ஜெயஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். முன்பகை காரணமாக நடந்த இந்த சம்பவம் தமிழகம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

p> 

 

இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி மாணவி ஜெயஸ்ரீ யை எரித்துக் கொன்றவர்களுக்கு உட்சபட்ச தண்டனையான தூக்கு தண்டனை வழங்க வேண்டும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.#ஜெயஸ்ரீ என குறிப்பிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தேமுதிக சார்பாக 1 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.