CPM TN Leader Mutharasan Interview
ரஜினி, யாரை சமூக விரோதிகள் என்று கூறுகிறார் என்றும், அவரது கருத்து ஏற்புடையதல்ல... அது நிராகரிக்கக் கூடியது என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் கடுமையாக சாடியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். தற்போது அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை ரஜினிகாந்த் இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், மக்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் கலவரம் ஏற்பட்டது என்று கூறினார்.
இந்த நிலையில் சென்னை திரும்பிய அவர், ஏர்போட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சமூக விரோதிகள்தான் நுழைந்து கெடுத்தார்களோ, அதேபோன்று தூத்துக்குடி போராட்டத்திலும் நுழைந்ததாக கூறினா. மேலும், சமூக விரோதிகள் போலீசாரை தாக்கிய பிறகே கலவரம் ஏற்பட்டதாகவும் கூறினார். மக்கள் போராட்டம் போராட்டம் என்று சொல்லி தமிழகத்தை சுடுகாடாக்கிடாதீங்க என்றும் கேள்வி கேட்ட செய்தியாளர்கள் மத்தியில் ரஜினிகாந்த் ஆவேசமாக பேசினார்.
நடிகர் ரஜினி காந்தின் இந்த பேச்சு குறித்து, பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன், தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்தபோது, நடிகர் ரஜினிகாந்த் ஆவேசமாக பதிலளிக்கிறார். அவர் கோபத்தில் பதிலளிக்கிற காரணத்தால் அப்படி சொல்கிறாரா என்பது தெரியவில்லை என்றார்.
மக்கள் போராடினால் ஏன் தமிழகம் சுடுகாடாகிறது. மக்கள் வேண்டுமென்றே போராடுகிறார்களா? என்று கேள்வி எழுப்பினார். 100-வது நாள் அன்றுதான் கலவரம் நடைபெற்றது. 99 நாட்களாக கலவரம் ஏற்படவில்லை. ரஜினி யாரை சமூக விரோதிகள் என்கிறார்.
திரும்ப திரும்ப அவர் சமூக விரோதிகள் என்று கூறுகிறார். இப்படி அவர் சொல்வதால், தாக்குதலுக்கு காரணமானவர்களை காப்பாற்ற முயல்கிறாரா? அவர் கூறிய கருத்து ஏற்புடையதல்ல... நிராகரிக்கக் கூடியது. மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தக்கூடிய கருத்தாகும் என்று முத்தரசன் கூறினார்.
