cpm state secretary criticize rajinikanth

எதற்கும் போராடாமல் ரஜினி வேண்டுமானால் அடிமையாக இருந்துவிட்டு போகட்டும்; அதற்காக மக்களையும் அப்படி இருக்க சொல்வதற்கு ரஜினிக்கு உரிமை இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த வன்முறையில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், போராட்டத்தில் சமூக விரோதிகள் சிலர் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாக கூறினார். மேலும் அனைத்து பிரச்னைக்கும் போராட்டம் நடத்தாமல் நீதிமன்றத்தின் வாயிலாக தீர்வு காண முனைய வேண்டும். போராட்டம் நடத்தும் மக்கள், சமூக விரோதிகள் நுழைந்துவிடாதவாறு கவனமாக இருக்க வேண்டும் என பேசினார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஜினி பேசியது தொடர்பாக கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், ரஜினி இன்று தூத்துக்குடியில் பேசியிருப்பது முழுக்க முழுக்க பாஜகவின் குரலாகவே இருக்கிறது. போராட்டத்தில் சமூக விரோதிகள் இருந்ததற்கான ஆதாரம் ரஜினியிடம் இருக்கிறதா? ரஜினி வேண்டுமானால் எதற்கும் போராடாமல் அடிமையாக இருந்துவிட்டு போகட்டும்; அதற்காக மக்களை அப்படி இருக்க சொல்ல அவருக்கு உரிமை இல்லை என கடுமையாக பதிலடி கொடுத்தார்.