டி.பி.ஜெயின் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். 

இதுக்குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,” சென்னை துரைப்பாக்கத்தில்‌ உள்ள டி.பி. ஜெயின்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி கடந்த 50 ஆண்டுகளாக அரசு உதவி பெறும்‌ கல்லூரியாக செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில்‌ 7 இளங்கலை, 3 முதுகலை பாடப்பிரிவுகளில்‌ ஆண்டுதோறும்‌ சராசரியாக 1,000 மாணவர்கள்‌ சேர்ந்து பயின்று வருகின்றனர்‌. 1990-ஆம்‌ ஆண்டுக்குப்‌ பிறகு தமிழகத்தில்‌ அரசு உதவி பெறும்‌ கல்லூரிகள்‌ சுயநிதிப்பிரிவை தனியாக தொடங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டதன்‌ அடிப்படையில்‌ மேலே குறிப்பிட்ட 10 பாடப்பிரிவுகளுடன்‌ இக்கல்லூரி நிர்வாகம்‌ சுயநிதிப்‌ பிரிவில்‌ மேலும்‌ 10 பாடங்களை கூடுதலாக நடத்துகிறது. இதில்‌ சராசரியாக ஆண்டுக்கு 1,500 மாணவர்கள்‌ சேர்க்கப்படுகின்றனர்‌. இந்த பாடப்பிரிவில்‌ அரசு உதவி பெறும்‌ பிரிவில்‌ வசூலிக்கப்படுவதை விட பல மடங்கு கட்டணம்‌ கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. 

சுயநிதிப்‌ பாடப்பிரிவின்‌ மூலம்‌ லாபம்‌ பெற ஆரம்பித்த டி.பி.ஜெயின்‌ கல்லூரி நிர்வாகம்‌, கடந்த சில ஆண்டுகளாக அரசு உதவிபெறும்‌ பாடப்பிரிவையும்‌ சுயநிதிப்‌ பாடப்பிரிவாக மாற்றி அதீத கட்டணக்‌ கொள்ளையில்‌ ஈடுபட்டு வருகிறது. 2020-21ஆம்‌ ஆண்டு முதல்‌ அரசு உதவி பெறும்‌ பிரிவில்‌ மாணவர்‌ சேர்க்கையை முற்றிலுமாக நிறுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும்‌ மேலாக அரசு உதவி பெறும்‌ பிரிவில்‌ பணி நிறைவு பெறும்‌ பேராசிரியர்களின்‌ இடத்தில்‌ புதிய ஆசிரியர்களை நியமிப்பதை நிறுத்தியுள்ளது. இந்தப்‌ பிரச்னையில்‌ தாங்கள்‌ தலையிட்டு, சட்டத்துக்குப்‌ புறம்பாக செயல்பட்டு வரும்‌ டி.பி. ஜெயின்‌ கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்‌ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: பாஜகவில் இருந்துதான் எனக்கு அழைப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன.. காங்கிரஸிலிருந்து கழன்றுகொள்ள நக்மா ரெடி.?