CPI tamilnadu secretary Mutharasan support to vairamuthu

ஆண்டாள் விவகாரத்தை மதவாதப் பிரச்சனையாக மாற்ற சில இந்துத்துவா அமைப்பினர் முயற்சி செய்வதாகவும், தனிப்பட்ட முறையில் கவிஞர் வைரமுத்துவை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், அவரை சீண்ட நினைத்தால் கடும் எதிர் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்த தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து தினமணி நாளிதழில் வைரமுத்துவின் அந்த பேச்சு கட்டுரையாக வெளிவந்தது.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், தனது பேச்சு யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக்கேட்டுக் கொள்வதாக வைரமுத்து தெரிவித்திருந்தார்.

ஆனாலும் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள் எஸ்.வி.சேகர், விசு மற்றும் பக்தர்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இன்று மாலைக்குள் வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கெடு விதித்திருந்தனர்.

நாளை ஆண்டாள் கோவில் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ஆண்டாள் விவகாரத்தை மதவெறியர்கள் சிலர், மதப்பிரச்சனையாக மாற்ற முயற்சி செய்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

வைரமுத்து மன்னிப்புக் கேட்பதாக தெரிவித்தபின்னும் அவரை விமர்சிப்பதும், தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்துவதும் கண்டனத்துக்குரியது என தெரிவித்தார். வைரமுத்துவை தனிப்பட்ட நபர் என்ற கோணத்தில் யாராவது அணுகுவார்களேயானால், அவர்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.