பகவத் கீதையை பொறியியல் மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற  மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அடிபணியக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய பாஜக அரசு தனது சொந்த விருப்பங்களையும் எதிர் விளைவுகளை உருவாக்கும் கொள்கைகளையும் நாட்டு மக்களின் மீது திணித்துவிட பல்வேறு வகையில் நிர்ப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் பகவத்கீதை படித்திட வேண்டும் என்பதாகும்.
அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் பரிந்துரையை ஏற்று அண்ணா பல்கலைக்கழகம் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது. காலம் காலமாகப் போற்றி பாதுகாக்கப்பட்டு வரும் மதச்சார்பின்மை என்ற உயரிய கொள்கையைச் சீர்குலைத்து, ஒரே நாடு, ஒரே மதம் என்ற வகுப்புவாத மதவெறியூட்டும் கொள்கையை அமல்படுத்தி, குறுகிய அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயல்களில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது.


மத்திய அரசின் நிர்ப்பந்தங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அடிபணியக் கூடாது. பகவத் கீதை புகுத்தப்படுவதை கைவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு முத்தரசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.