ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சரும், தற்போதைய பாஜக எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக தலைவர்களில் ஒருவரான கிரண் மகேஷ்வரிக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அரியானாவின் குருகிராமில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் நிலைமை மோசமடைந்தது. உயிர் காக்கும் கருவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில்,  இன்று காலை எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான உதய்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.