எதிர்காலத்திலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் போன்ற சவால்களை எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வெபினார் மூலம் உரையாற்றினார், அப்போது பேசிய அவர் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பின்னர் இந்தியாவின் சுகாதாரத்துறை மீது உலக அளவில் நம்பிக்கை அதிகரித்துள்ளது, மத்திய அரசு சுகாதாரத் துறைக்கு ஒதுக்கியுள்ள பட்ஜெட் அசாதாரணமானது, இது இந்தத் துறை மீதான எங்களது உறுதிப்பாட்டை காட்டுகிறது. கொரோனா தொற்றுநோய் எதிர்காலத்தில் இதே போன்ற சவால்களை எதிர்த்து போராட நாம் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்ற பாடத்தை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது எனக் கூறினார். 

மருத்துவ உபகரணங்கள் முதல் மருத்துவர்கள் வரை, வென்டிலேட்டர் முதல் தடுப்பூசிகள் வரை, விஞ்ஞான ஆராய்ச்சி முதல் கண்காணிப்பு உட்கட்டமைப்பு வரை, மருத்துவர்கள் முதல் தொற்றுநோயியல் நிபுணர்கள் வரை, இவை அனைத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இதனால் எதிர்காலத்தில் எந்த ஒரு சுகாதார அவசர நிலையையும் நாடு சிறப்பாக எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவர் கூறியுள்ளார். தொற்றுநோய் நெருக்கடியின்போது சிறப்பாக பணியாற்றிய சுகாதாரத் துறை மற்றும் அதன் கண்டுபிடிப்புகளையும் மோடி வெகுவாக பாராட்டினார். இந்தியாவின் சுகாதாரத் துறை மீதான உலக நாடுகளின் நம்பிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது, அதனால் மேட் இன் இந்தியா தடுப்பூசி களுக்கான தேவை அதிகரித்து வருகிறது, உலக நாடுகளில் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்றார். 

மக்களின் உடல்நலம் தொடர்பான சவால்களை எதிர்கொள்ள 4 வகையில் தனது அரசு அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது, அதாவது நோயை தடுப்பது மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, அனைவருக்கும்  சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்தல், போதிய சுகாதார உட்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் சுகாதார நிபுணர்களின் தரம்  மற்றும் எண்ணிக்கையை அதிகரித்தல் அதில் சீரிய கவனம் செலுத்துதல் போன்ற விஷயங்களை கடைப்பிடித்து வருவதாக அவர் கூறினார்.  சுகாதார துறையில் தனது அரசாங்கம் முழுமையான அணுகு முறையை பின்பற்றி வருவதாகவும் அதனால் தான் சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி மக்களின் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். நோயைத் தடுப்பது, பின்னர் அதை குணப்படுத்துவது என அணுகுமுறைகளை கடைப்பிடித்து வருவதாக அவர் அப்போது கூறினார்.  

மத்திய அரசு சுகாதாரத் துறையில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல், கடைக்கோடி மக்களுக்கும் இந்த வசதிகள் கிடைப்பதை  உறுதி செய்கிறது என்றார். சுகாதாரத் துறையில் முதலீடு செய்வது, மற்றும் வேலைவாய்ப்புகளை கொண்டுவருவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் கூறினார். 2025-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் காச நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதை இலக்காக வைத்து அரசு செயல்பட்டு வருவதாக மோடி தெரிவித்தார். இந்த இலக்கை அடைவதற்கு முகக்கவசம் அணிந்து, நோயை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை வழங்குவது அவசியம் எனவும் அவர் கூறினார்.