Asianet News TamilAsianet News Tamil

இது தமிழ்நாட்டின் தன்மான பிரச்சனை - கொந்தளித்த ராமதாஸ்..!

தமிழக வனத்துறை அதிகாரிகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்த விவாகாரம் தொடர்பாக தவறிழைத்த அதிகாரிகளை தமிழக அரசு விட்டுவிடக் கூடாது எனவும் இது நமது தன்மான பிரச்சனை எனவும் குறிப்பிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார்.
 

Covai Elephant Death
Author
Coimbatore, First Published Nov 28, 2021, 4:59 PM IST

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்தது குறித்து விசாரிப்பதற்காக பாலக்காடு சென்ற தமிழ்நாடு வனத்துறையினரை அங்குள்ள ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வனத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், அவர்களை சட்டவிரோதமாக காவலில் வைத்த ரயில்வே பாதுகாப்புப் படையினரின் செயல் கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். 

Covai Elephant Death

கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நவக்கரை பகுதியில் ரயில் பாதையை கடக்க முயன்ற யானைகள் கூட்டத்தின் மீது வெள்ளிக்கிழமை இரவு கர்நாடகத்தின் மங்களூரிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விரைவு ரயில் மோதியதில் ஒரு தாய் யானை மற்றும் இரு குட்டிகள் என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தன. அனுமதிக்கப்பட்டதை விட அதிக வேகத்தில் ரயில் வந்தது தான் விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ரயில் ஓட்டுனர்கள் இருவரை கைது செய்த தமிழ்நாடு வனத்துறையினர், ரயில் எந்திரத்தில் பொருத்தப் பட்டிருந்த வேகம் காட்டும் ’சிப்’பை பறிமுதல் செய்தனர்.

Covai Elephant Death

அதில் பதிவாகியிருந்த விபரங்களை அறிவதற்காக அவர்கள் பாலக்காடு ரயில் நிலையத்திற்கு சென்றனர். ஆனால், அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைக்காத ரயில்வே அதிகாரிகள், வனத்துறையினர் நால்வரை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர். நவக்கரை வனப்பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது வாடிக்கையாகி விட்டது. நடப்பாண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட யானைகள் ரயில் மீது உயிரிழந்துள்ளன. பலமுறை எச்சரித்தும் ரயில்ககள் அந்தப் பாதையில் வேகமாக இயக்கப்படுவது தான் விபத்துகளுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. யானைகளை பாதுகாக்கும் பணியில் உள்ள தமிழ்நாடு வனத்துறைக்கு இத்தகைய விபத்துகளைத் தடுக்கும் கடமையும், பொறுப்பும் உண்டு. 

Covai Elephant Death

அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில் தான் வனத்துறை அதிகாரி ராமசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர், ரயில் ஓட்டுனர்களை கைது செய்துள்ளனர். அதற்கான அனைத்து அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு பழி வாங்கும் வகையில் அவர்களை ரயில்வேதுறை பாதுகாப்பு படையினர் கைது செய்திருப்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயலாகும். அதுமட்டுமின்றி, வனத்துறை அதிகாரிகளை விடுதலை செய்யும்படி தமிழக வனத்துறை உயரதிகாரிகள் கோரியும் அதை ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஏற்கவில்லை. 

யானைகள் மீது ரயிலை மோதியதற்காக கைது செய்யப் பட்ட இரு ஓட்டுனர்களை தமிழக வனத்துறையினர் விடுதலை செய்ததுடன், பறிமுதல் செய்யப்பட்ட சிப்பை ஒப்படைத்த பிறகு தான் வனத்துறை அதிகாரிகள் குழுவை ரயில்வே பாதுகாப்புப் படை விடுவித்திருக்கிறது. இந்த மோதலை வனத்துறையினருக்கும், ரயில்வே பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலாக பார்க்க முடியாது. கைது செய்யப்பட்ட ஓட்டுனர்களும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். வனத்துறை அதிகாரிகள் குழுவில் இருந்த நால்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். கேரளத்தைச் சேர்ந்த ரயில்வே ஓட்டுனர்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் எவ்வாறு கைது செய்யலாம்? என்ற தன்முனைப்பு தான் இந்த மோதலுக்குக் காரணமாகும்.Covai Elephant Death

கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களின் தன்முனைப்புக்காக, விசாரணைக்காக சென்ற தமிழக வனத்துறை அதிகாரிகளை சிறைபிடித்து சட்டவிரோதக் காவலில் வைத்ததும், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் நியாயப்படுத்த முடியாதவை. இது தமிழக அரசின் தன்மானத்திற்கு விடுக்கப்பட்ட சவால் ஆகும். ரயில்வே பாதுகாப்புப் படையினரின் அத்துமீறலுக்கு பணிந்து ரயில் ஓட்டுனர்கள் இருவரை வனத்துறை அதிகாரிகள் விடுவித்தது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் ஆகும்.

Covai Elephant Death

தமிழக வனத்துறை அதிகாரிகளை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிறை பிடித்து அவமதித்ததை தமிழக அரசு விட்டுவிடக் கூடாது. இதற்குக் காரணமான ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும். ரயில்வே துறை நிர்வாகத்திடம் இது குறித்து புகார் செய்வது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவதையும், பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைப்பதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios