தேச துரோக வழக்கில் புழல் மத்திய சிறையில் அடைக்கபட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஜாமினில் விடுதலையானார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசியதாக அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

இதுகுறித்த வழக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் விசாரணை வந்தது.

அப்போது,  இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சிறை செல்கிறேன் என ஏப்ரல் 3ம் தேதி வைகோ தானாக ஆஜராகி கூறினார்.

இதை விசாரித்த நீதிபதி வைகோவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் இருமுறை வழக்கு விசாரணைக்கு வந்தபோதும் வைகோ ஜாமீன் கோரவில்லை.

இதையடுத்து வைகோ சார்பில் நேற்று முன்தினம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தேவதாஸ் ஜாமீன் மனுதாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து, வைகோவை சொந்த ஜாமீனில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி இன்று காலை 52 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜாமினில் விடுவிக்கபட்டார்.  அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.