இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்ட வழக்கில் டிடிவி தினகரனுக்கு கூடுதல் அவகாசம் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இரட்டை இலை சின்னத்தை பெற  அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் லஞ்சம் கொடுத்ததாக டெல்லி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இதுகுறித்த சம்மனை டெல்லி காவல் துறையினர் தினகரனிடம் வழங்கினர்.

இந்நிலையில், டிடிவி தினகரன் நேரில் ஆஜராக 3 நாட்கள் கால அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால், டிடிவி தினகரன் அவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 17 ஆம் தேதி சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகரை டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை பெற்றுத்தர தினகரன் 60 கோடிக்கு பேரம் பேசியதும் அதற்காக 1.30 கோடி ரூபாய் முன் பணம் கொடுத்ததும் தெரியவந்தது. மேலும், கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவும், டிடிவி தினகரனும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திராவை 8 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால், டெல்லி காவல் துறையினர் முன் டிடிவி தினகரன் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.