இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். காணொலி காட்சி மூலமாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த -6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. அதில் பதிவான வாக்குகள் மே-2 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. நடந்து முடிந்த தேர்தலில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகம் முழுதும் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப் பெட்டிகள் பத்திரப்படுத்த பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு பதிவு எந்திரங்கள் உள்ள அறைகளிலும் அதற்கு வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதற்கிடையே வாக்குப்பதிவு எந்திரங்களில் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு புகார்கள் மற்றும் சந்தேகங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவருடன் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று தீவிரமாகி வரும் நிலையில், வரும் 2 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும்  இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

காணொலி காட்சி மூலமாக இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் சத்ய பிரத சாகு ஈடுபட்டு வருகிறார். ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு சமூக இடைவெளி கடைபிடிக்கும் விதமாக எத்தனை மேசைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனையானது நடைபெறுகிறது.மேலும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டு வருவதும்  குறிப்பிடதக்கது.