முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு மட்டுமே நெடுஞ்சாலைத்துறைக்கான டெண்டர்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், இதில் 1500 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தங்க தமிழ்செல்வன், செற்றி வேல் ஆகியோர் பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.

எம்எல்ஏ பதவியில் இருந்து தங்கத்தமிழ்ச் செல்வன், வெற்றிவேல் ஆகியோர் நேற்று  தலைமைச் செயலகத்திற்கு வந்தனர். ஆனால், வாயிலை அடைத்து அவர்களுக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், வலுக்கட்டாயமாக அவர்கள்  இருவரையும் வெளியேற்றினர். இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு குவிந்த செய்தியாளர்களை கண்டதும் போலீசார் அங்கிருந்து விலகிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்காக, எடப்பாடி பழனிசாமியின்  மகன் மற்றும் சம்பந்திக்கு மட்டுமே சுமார் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் 5 டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதன்மூலம், அரசுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருப்பதால், இதுகுறித்து உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.