சென்னையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. தொடக்கத்தில் கொரோனா வைரஸ் தெருவில் ஒருவருக்கு தொற்றினாலும், அந்தத் தெருவை மூடி, கட்டுப்பாட்டு மண்டலமாக சென்னை மாநகராட்சி அறிவித்து வந்தது. தற்போது தெருவில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் மட்டுமே கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் சென்னையில் கட்டுப்பாடு பகுதிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்துவருகிறது. சென்னை மாநகர பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்தன. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருந்தது.
தற்போது இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவருகிறது. தற்போது சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 56 கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டுமே உள்ளன. அதாவது, 56 தெருக்களில் மட்டுமே தலா 5 மேற்பட்ட கரோனா நோயாளிகள் உள்ளனர்.  சென்னையில் 15 மண்டலங்கள் உள்ள நிலையில், இந்த 56 கட்டுப்பாட்டு பகுதிகளும் 6 மண்டலங்களில் மட்டுமே உள்ளது. 9 மண்டலங்களில் கட்டுப்பாட்டு பகுதிகளே இல்லை. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 18 பகுதிகளும், அம்பத்தூரில் 17 பகுதிகளும், அண்ணா நகரில் 16 பகுதிகளும், தேனாம்பேட்டையில் 3 கட்டுப்பாட்டு பகுதிகளும், வளசரவாக்கம், திரு.வி.க நகர் மண்டலத்தில் தலா ஒரு கட்டுப்பாட்டு பகுதிகளும் உள்ளன.