Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை கட்டுப்படுத்தும் நாட்டு மருந்து..? இப்போது உலகமே தப்பிக்க இது மட்டும்தான் ஒரே தீர்வு..!

ஒரே ஒரு முறை தவறினாலும் அது அறிவியல் உண்மைக்கு மாறானது ஆகும். அப்போது அறிவியல் உலகம்  இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாது. 

Coronaviruses ..? Now this is the only solution for the world to escape
Author
Tamil Nadu, First Published Mar 27, 2020, 1:41 PM IST

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் உறைந்து போய் இருக்கிறது. நோய்ப் பரவல் தீவிரம் ஆகிறது; உயிர் இழப்பு அதிகரித்து வருகிறது. அறிவியலில், பொருளாதாரத்தில் மிக முன்னேறிய நாடுகள், என்ன செய்வதென்று தெரியாமல் திணறுகின்றன. 
  
'தனிமைப் படுத்துதல்' மட்டுமே நம் முன் உள்ள ஒரே உபாயம் என்று ஒருமித்த குரலில் கூறுகிறார்கள். இன்றைக்கு, இதுதான் உண்மை நிலை. இதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால்...  'நம்ம நாட்டுல இது பத்தி ஏற்கனவே சொல்லி இருக்காங்க... இதை எல்லாம் சாப்பிட்டா... இதை எல்லாம் கடைப்பிடிச்சா...  இப்படி எல்லாம் நடந்துக்கிட்டா... கொரானா ஓடிப் போயிரும்...' Coronaviruses ..? Now this is the only solution for the world to escape

ஊடகங்களில், வலைதளங்களில் இது தொடர்பான கருத்துகள் தொடர்ந்து முன்வைக்கப்படுகின்றன. போதாதற்கு, 'இதுதான் சரியான சமயம்' என்று 'பாரம்பரிய மருத்துவம் பற்றி வரிந்து கட்டிக் கொண்டு வரைந்து தள்ளுகிறார்கள். 'நோக்கம்' - நன்றாகத்தான் இருக்கிறது. மிக நிச்சயம் செய்தாக வேண்டிய பணிதான். தவறு இல்லை. பிறகு...? இருங்கள் சொல்கிறேன்.  

விழுப்புரம் மாவட்டம். திருவெண்ணெய்நல்லூர் - எனது ஊர். கிராமம்தான். பஞ்சாயத்துப் பள்ளியில், மரத்தடியில் அமர்ந்து, தமிழ் வழியில் படித்தவன் நான். எனவே 'தமிழ் உணர்வு' இயல்பாகவே அமைந்து விட்டது. கூடவே தமிழ் மருத்துவமும்! என் தாய்வழிக் கொள்ளுத் தாத்தா - கோபால சுந்தரம் - சித்த மருத்துவம் செய்தவர். காசு வாங்காமல், முற்றிலும் இலவசமாக, பொதுச் சேவையாக மட்டுமே கொண்டு இருந்தவர். 'சோற்றுக்கு' - 'புரோகிதம்'. பொழுதுபோக்க - தெருக்கூத்து; (பாடுவார்; நடிப்பார். நான் பார்த்தது இல்லை) சேவைக்கு- சித்த மருத்துவம். இதுதான் அவர் வாழ்ந்த வாழ்க்கை.

 Coronaviruses ..? Now this is the only solution for the world to escape

என் தாத்தா மட்டுமல்ல; எனக்குத் தெரிந்து, நான் பார்த்த சித்த மருத்துவர்கள் எல்லாருக்குமே, சித்த மருத்துவம் - மக்கள் சேவையாக மட்டுமே இருந்தது. இவர்கள் அனைவருமே, 'ஊருக்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும்' என்கிற எண்ணத்தால் உந்தப் பட்டவர்கள். இப்படிப் பல பேர் ஒவ்வொரு ஊரிலும் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் பணியாற்றினார்கள். அப்படிச் சிலர் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறைதான் - சித்த மருத்துவம். ஏறத்தாழ, இதன் மறுபெயர்தான் - 'தமிழ் மருத்துவம்'.  அன்று முதல் இன்று வரை, அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை ஆற்றி வருகிற சித்த மருத்துவர்கள் எல்லாரையும் நன்றியுடன் வணங்குகிறோம். ஆனால், தற்போது தலைதூக்கி இருக்கிற ஒரு போக்குதான் கவலை அளிக்கிறது.Coronaviruses ..? Now this is the only solution for the world to escape

கொரோனா நோயின் கோரப்பிடியில் சிக்கி உலகமே தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. மருத்துவ அறிவியல் துறை வல்லுநர்கள், இடையறாது தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் சாதாரணம் ஆனவர்கள் அல்லர். இத்துறையில் விற்பன்னர்கள்; ஆய்வு செய்வதில் நிபுணர்கள்; உலகளாவிய சிறப்பு பெற்றவர்கள். 

இந்த அறிவியல் அறிஞர்கள், மதம், இனம், தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். ஒட்டு மொத்த மனித குலத்துக்காக உழைக்கிறவர்கள். நமது மருத்துவ முறை மீது நாம் கொண்டுள்ள மட்டற்ற மரியாதை காரணமாக இவர்களை நாம் குறைத்து மதிப்பிடலாகாது. 'இதுவரை இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை; ஆய்வுகள் தொடர்கின்றன' என்று கூறுவதற்கு இவர்கள் தயங்கவில்லை; வெட்கப்படவும் இல்லை. காரணம், வெற்றியும், தோல்வியும் தமக்கானது அல்ல என்பதில் உள்ள தெளிவு. அறிவியலில் தொடர் ஆய்வுகள், தொடர் முயற்சிகள் மட்டுமே உண்டு. அதிலும், 'வெற்றி' என்று சொல்லப்படுகிற எதையும் அறிவியலின் வெற்றி என்றுதான் பார்க்கிறார்கள். தனி மனித வெற்றியாக அவர்கள் சொல்லிக் கொல்வது இல்லை' இதற்கு மதம், இனம், தேசம் என்று எந்தப் பூச்சும் தருவது இல்லை.     Coronaviruses ..? Now this is the only solution for the world to escape

'இது ஜெர்மானிய மருத்துவம்'; 'இது ஆங்கில அறிவியல்' என்று 'அயலார்' சொல்லக் கேள்விப் படுகிறோமா..?உலகளாவிய பார்வையைத் தரித்துக் கொண்டதால்தான், அறிவியல் உலகம், விரிவடைந்த வண்ணம் உள்ளது. எல்லாராலும் ஏற்றுக் கொள்கிற universal acceptance அறிவியல் ஆய்வுக்கு மிக அவசியம். 

இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் அன்றி, சித்த மருத்துவம் அடுத்த கட்டத்துக்கு நகராது. கொரோனா போன்ற அச்சுறுத்தல் வருகிற போது (மட்டும்) உடனடியாக 'நான் மருந்து கண்டுபிடித்து விட்டேன்' என்று யாரேனும் கூறினால், அதனை அறிவுலகம், எவ்வாறு எடுத்துக் கொள்ளும்..? மன்னிக்கவும்; யாருடைய முயற்சியையும் குறை சொல்லுதல் நமது நோக்கம் அன்று. 

நமது முனைவுகள் இதுவரை, தனிநபர் முயற்சிகளாகவே இருந்து வருகின்றன. ஆங்காங்கே ஓரிருவர் குணம் அடைந்து விட்டார்; ஆகவே இதுதான் மருந்து என்று சொன்னால், அறிவியல் உலகம் உடனே அங்கீகரித்து விடாது. ஒரு புரிதலுக்காக மட்டும் சொல்கிறேன். ஒரு நாணயத்தை வானை நோக்கிச் சுண்டி விடுங்கள். மேலே சென்ற நாணயம், மீண்டும் கீழே வரவே செய்யும். காரணம், புவி ஈர்ப்பு விசை என்று அறிவோம். ஒரு முறை, இரு முறை அல்ல; ஒரு லட்சம் முறை, ஒரு கோடி முறை செய்தாலும், இதே விளைவுதான் கிடைக்கும். 

ஒரே ஒரு முறை தவறினாலும் அது அறிவியல் உண்மைக்கு மாறானது ஆகும். அப்போது அறிவியல் உலகம் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளாது. 10 இல் 9 பேருக்கு 'வேலை செய்கிறது' என்று சொன்னால் அது அறிவியல் ஆகாது. ஒருவர் ஒரு மருந்தை எடுத்துக் கொள்ளும் போது, 'நம்பிக்கை' இருந்தால்தான் செயல்படும் என்று மருத்துவர் சொல்வதில்லை. நோய் - குறைபாடு - தீர்வு என்று மட்டுமே செயல்படுகிறது அறிவியல். அப்படி என்றால், நமது மருத்துவ முறை - குறைபாடானதா...? சர்வ நிச்சயமாக இல்லை. பிறகு..? குறைபாடு மருத்துவ முறையில் இல்லை; அதனை முறையாக அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லாத நம் மீதுதான் இருக்கிறது. Coronaviruses ..? Now this is the only solution for the world to escape

அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, சித்த மருத்துவ ஆராய்ச்சியில் ஆர்வம், அவருக்கு இருந்தது போல் தோன்றியது. அதற்கு முன்பாக, மொரார்ஜி தேசாய், இதே போன்று ஈடுபாடு கொண்டவராய் இருந்தார் என்று கருதுகிறேன். இவர்களின் அரசியல் பின்புலம் நமக்கு முக்கியம் இல்லை. ஆனால் இவர்களுக்கு பாரம்பரிய, மரபுசார் மருத்துவ முறைகளின் மீது ஓர் ஈர்ப்பு இருந்தது. 

அப்போதே நாம் முழு மூச்சுடன் 'களத்தில்' குதித்து இருக்க வேண்டும். நல்வாய்ப்பைத் தவற விட்டு விட்டோம். சர்வதேச அங்கீகாரம் பெற, அறிவியல் உலகம் நம்மை ஏற்றுக் கொள்ள, நாம் செல்ல வேண்டிய தூரம்,  வெகு வெகு நீளம். இந்தத் திசை நோக்கி நாம் இன்னும் முதல் அடியை எடுத்து வைக்கவில்லை. 

எதிர்மறையாக, அவநம்பிக்கையில் இதனைக் கூறவில்லை. ஒருங்கிணைந்த அறிவியல் ரீதியிலான ஆய்வுகளில் முழுமையாக இறங்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் வெளியில் தெரியாத எத்தனையோ சித்த மருத்துவர்கள் வாய் வழியாக மட்டுமே சொல்லி விட்டுச் சென்ற மருத்துவ உண்மைகளை ஒன்று திரட்ட வேண்டும்.  

சொன்னால் சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏதேனும் ஒரு மருந்தை அங்கு இருந்த சித்த மருத்துவர் சொல்லி இருப்பார். தமிழ்நாட்டின் வேறு ஒரு பகுதியில் அதே நோய்க்கு வேறு ஒரு பகுதியில் வேறொரு சித்த மருத்துவர் பிறிதொரு மருந்து சொல்லுவார். இரண்டிலுமே நோய் குணம் ஆகும். ஆனால், இரண்டு மருந்துகளின் உள்ளடக்கப் பொருட்கள் ingredients முற்றிலும் வேறானதாக இருக்கும். 

பாதங்கள் தேயத்தேய நடந்து நடந்து, கண்கள் பனிக்கப் பனிக்கப் பார்த்துப் பார்த்து, கைகள் வலிக்க வலிக்க அரைத்து அரைத்து, சிந்தை முழுதும் இதையே நினைத்து நினைத்து நமது முன்னோர் கண்டுபிடித்த மருந்துகள், சிகிச்சைகள் - நமது வலிமை; நமது வரம். (இது குறித்த எனது அனுபவங்கள், நான் அறிந்து கொண்ட உண்மைகள் குறித்துப் பிறகு எழுதுகிறேன்)

ஒரு சிலரின் விளம்பர ஆசையால் நமது மருத்துவ முறை, அறிவியல் உலகின் கேலிக்கும் ஏளனத்துக்கும் ஆளாகி வருகிறது. இது நல்லதல்ல. முறையாக ஆய்வு செய்து, முடிவுகளை, அறிவியல் உலகத்துக்கு சமர்ப்பித்து, அவர்களின் அங்கீகாரம் பெறுதல் உடனே தொடங்கட்டும். 

கூடவே, நமக்கே சொந்தமான மூலிகைகள், தாவரங்கள் - ஆகியவற்றின் மீது நாம் முழுமையான காப்பீட்டு உரிமை கேட்டுப் பெறுவோம். நமக்கு நாமே பெருமை பேசிப் பயன் இல்லை. உலகம் ஏற்கும் வகையில் அதற்கான அங்கீகார வடிவம் தரல் வேண்டும். தமிழ்த் தாத்தா உ.வே.சு. செய்த இலக்கியப் பணியைப் போன்று, தமிழ் மருத்துவத் துறையிலும், ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு வீடாகச் சென்று அரிய தகவல்கள், உண்மைகளை சேகரிக்கும் பணியை முதலில் தொடங்கலாம். 

நிறைவாக, இந்தக் காயில் இந்தப் பயன் இருக்கிறது; இந்தப் பழம் சாப்பிட்டால் இதற்கு நல்லது என்று பரிந்துரைக்கிற பணியைத் தாண்டி விரிவடைந்தது மருத்துவரின் பங்களிப்பு. வெறுமனே 'டயடீஷியன்' அல்ல ஒரு 'டாக்டர்'. புரிந்து கொண்டால் நல்லது. மருந்து, சிகிச்சை, தொடர் ஆய்வு, மனித குல மேம்பாடு... சித்த மருத்துவர்களின் குணங்கள் ஆகட்டும். தானே தலை நிமிரும் 'தமிழ் மருத்துவம்'. இப்போதைக்கு..., கொரானா பிடியில் இருந்து தப்பிக்க, தனித்திருத்தல் மட்டுமே ஒரே தீர்வு. வாழ்க நலமுடன்.   Coronaviruses ..? Now this is the only solution for the world to escape    

-எழுத்தாளர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி. 

Follow Us:
Download App:
  • android
  • ios