தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி எம்எல்ஏ ஒதுக்கிய நிதியை மறுத்திருப்பது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

கொரோனா தாக்கம் தமிழகத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசு முழு வீச்சில் இதில் இறங்கி தடுப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையிலும் இறங்கி உள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி முதல்வர் எடப்பாடியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகையால், முதல்வரின் கோரிக்கையை ஏற்று திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். அதேபோல்,  பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் மருத்துவ கருவிகள் வாங்க அரசியல் கட்சியினர் நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.அந்த அடிப்படையில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி  ஒரு கோடியே 3 லட்சம் ரூபாயை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கினார். முதலில் ஏற்றுக்கொண்ட ஆட்சியர் அலுவலகம் பிறகு, தொகுதி மேம்பாட்டு நிதியை அரவக்குறிச்சிக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறி திடீரென நிராகரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதுகுறித்து தலைமை செயலகத்துக்கு கடிதம் எழுதியுள்ள செந்தில்பாலாஜி;- அரவக்குறிச்சி மக்களும் கரூர் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டி இருப்பதால் இந்த நிதியை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறுகையில்;- இந்த சமயத்தில் அரசியல் சூழச்சி செய்யாமல் செந்தில்பாலாஜியின் தொகுதி மேம்பாட்டு நிதியை கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அளிக்க அனுமதி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.