கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் பணிகளுக்காக  திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கொரோனா நிவாரண நிதிக்கு தமிழக அரசு ரூ.3,280 கோடி ஒதுக்கீடு செய்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. ஊரடங்கால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி முதல்வர் எடப்பாடியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகையால், பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனைகள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு தேவையான தற்காப்புக் கருவிகள் வாங்குதல், கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்குவதாகவும், மேற்கண்ட பணிகளுக்கு நிதியை அளிக்குமாறும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக எம்.பி. நிதியிலிருந்து முதன் முதலாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் நிதி ஒதுக்கினார். பின்னர் விசிக எம்.பி. திருமாவளவன் நிதி ஒதுக்கினார். தற்போது திமுக எம்.பி. கனிமொழி, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளார். இதனிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.