பொது போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு குறித்தும் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 

சீனாவில் உருவான கொரோனா வைரஸ்  இந்தியாவில் நாளுக்கு நாள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா தொற்றால் 62,064 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை  22,15,075ஆக உயர்ந்துள்ளது. 15,35,744 பேர் குணமடைந்துள்ள நிலையில், 6,34,945 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் முதன்முறையாக இந்தியாவில் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 44,386 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, தொடக்கத்தில் மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லியில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. தற்போது டெல்லி கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. ஆனால், மகாராஷ்டிரா, தமிழகத்தில் தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை. மேலும் ஆந்திரா, கர்நாடகாவில் கொரோனா தொற்று தற்போது அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 8 மாநில முதல்வர்கள் நாளை காலை 10.30 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார். அப்போது கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார். மேலும், தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம், முதல்வர் எடுத்துரைக்க உள்ளார். பொது போக்குவரத்து, பள்ளிகள் திறப்பு குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.