தென்மாவட்டங்களில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நாள் ஒன்றுக்கு 5000 பேருக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என முதல்வருக்கு காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் மூன்றாவது கடிதம் எழுதியுள்ளார். அதில், கடந்த ஜூன் 30ம் தேதி எனது முதல் கடிதத்தில் ஜூன் 27ம் தேதி நிலவரப்படி விருதுநகர் மாவட்டத்தில் பரிசோதனை 500க்கும் கீழ் இருந்தது அதன் பிறகு ஜூலை 9ல் தேதி எழுதியுள்ள கடிதத்தில் மதுரையில் 2858 லிருந்து 5799 ஆக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் விருதுநகரில் 538 லிருந்து 1595 பேருக்கு கொரோனா தொற்று நோய் கண்டறியப்பட்டது.

குறிப்பாக மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தொடர்ந்து தொற்று நோய் அதிகரித்து வருகிறது. எனினும் விருதுநகர் மாவட்டத்தில் ஜூலை 14ந் தேதி நிலவரப்படி 837 பேருக்கும் 15ந் தேதி 926 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் சுமார் 20 லட்சம் மக்கள் தொகையை கொண்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் குறைவாகவே தற்போது பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட பரிசோதனையின் முடிவுகளும் காலதாமதமாக அறிவிக்கப்படுகிறது. பரிசோதனை செய்தவர்கள் முடிவு வருவதற்குள் வெளியில் சுற்றுவதால் மேலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பரிசோதனை செய்தவர்கள் (tracing)கண்டறியப்பட்டு எங்கு எல்லாம் சென்றார்கள்,யார்,யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என்பதனை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

இதைப்போல் மதுரை மாவட்டம் சுமார் 30 லட்சம் பேர் வசிக்ககூடிய மாவட்டமாகும். இந்த மாவட்டத்திலும் குறைவாக பரிசோதனை செய்யப்பட்டு முடிவு அறிவிப்பதில் தாமதமாக அறிவிக்கப்படுகிறது. எனவே குறைந்தது ஒரு நாள் ஒன்றுக்கு மதுரை விருதுநகர் மாவட்டங்களில் 5000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும். தலைநகர் டெல்லியிலும், ராஜஸ்தானிலும் , சத்தீஸ்கரிலும் 30 நிமிடங்களில் எடுக்கக்கூடிய ராபிட் ஆன்டிஜன் டெஸ்ட் கருவியை தமிழகத்திற்கு வாங்குவதற்கு ஐ.சி.எம் ஆரின் செயலர் மற்றும் இயக்குநர் திரு.பல்ராம் பார்கவா அவர்களை சந்தித்து ஒப்புதல் வாங்கியுள்ளேன். 

ஆனால் தமிழக முதலமைச்சர் அவர்கள் தற்போது வரை அந்த ராபிட் ஆன்டிஜன் டெஸ்ட் கருவியை வாங்குவதற்கு முயற்சி எடுக்கவில்லை. எனவே தமிழக முதல்வர் அவர்கள் எப்படி கிருஷ்ணகிரி சேலம் போன்ற மாவட்டங்களில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொரோனா குறித்து ஆய்வு செய்து கேட்டறிந்தரோ அதைப்போல கொரோனா தொற்று நோய் அதிகரித்து வரும் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்வாரா? செய்யவேண்டும் இந்த மாவட்டத்தில் விரைவாக பரவி வரும் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த தீர்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.