ஆட்சியில் இருந்து தேன் எடுத்த போது, ஊழல் செய்து புறங்கையை நக்கிய பணத்தை மக்களுக்கும் தாரளமாக கொடுக்கலாமே என திமுகவை தமிழக பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. 

உலக நாடுளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர  வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. 

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி முதல்வர் எடப்பாடியும் கேட்டுக்கொண்டுள்ளார். ஆகையால், பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். திமுகவின் இந்த அறிவிப்புக்கு தமிழக பாஜக கடுமையான விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறது.

இதுகுறித்து தமிழக பாஜவின் அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில்;-  தொகுதி வளர்ச்சி நிதியை சொந்த காசாக காட்டிய @arivalayam இல்லாத தோரணை உருவாக்க 380 கோடி செலவாக்கும் ஸ்டாலின். சொந்த மக்களுக்கு வெறும் ஒரு கோடி கொடுக்க தான் மனசாட்சி உள்ளதா? ஆட்சியில் இருந்து தேன் எடுத்த போது, ஊழல் செய்து புறங்கையை நக்கிய பணத்தை மக்களுக்கும் தாரளமாக கொடுக்கலாமே என்று கடுமையாக விமர்சித்துள்ளது.