எம்.ஜி.ஆர் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றிஅரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வரும், துணை முதல்வரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் மக்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  அதேபோல், 4 அமைச்சர்கள்,  35க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை, அண்ணா நகரில் வசித்து வந்தவர் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியின் மகன் எம்.சி.சந்திரன்(73). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் போன்று கொரோனா அறிகுறிகள் காணப்பட்டத. இதனையடுத்து,  கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். சோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 6ம் தேதி சந்திரன் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மறைவுக்கு முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.