கொரோனா தொற்று தாக்கி குணமடைவோர் விகிதம் 60 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 

மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா நோயாளிகள் குணமடையும் விகிதம் 60 நோக்கி விடைகிறது. இன்றைய நிலவரப்படி, கொரோனா தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நோயாளிகளின் எண்ணிக்கையைவிட 1,32,912. 

இது வரை 3,59,859 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, சீராக அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது குணமடைந்தோர் எண்ணிக்கை 59.52 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 11,881 கொரோனா நோயாளிகள் குணமாகியுள்ளனர்.
தற்போது 2,26,947 நோயாளிகள் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

கொரோனா தொற்றால் குணமடைந்தோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு 93,154 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்து டெல்லியில் 59,992 பேர் குணமடைந்துள்ளனர். 52,926 பேர் தமிழ்நாட்டில் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் இந்தியாவில் மூன்றாம் இடத்தில் உள்ளது.

குணமடைந்தோர் விகிதத்தைப் பொறுத்தவரை சண்டிகர் 82.3 சதவிகிதம் பிடித்து முதல் இடத்திலும், மேகாலயா 80.8 சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் 79.6 சதவிகிதத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. கொரோனாவை கண்டறியும் பரிசோதனைச் சாலைகளை அரசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது 1065, கொவிட்-19 பரிசோதனைச் சாலைகள் நம் நாட்டில் உள்ளன. இதில் அரசு பரிசோதனைச் சாலைகள் 768, தனியார் பரிசோதனைச் சாலைகள் 297.

பரிசோதனை செய்வதும் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,29,588 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 90,56,173 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன