தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட குடிசைப்பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை சிறப்பு அதிகாரி வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.   தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோன வைரஸ் தொற்று தடுப்பு பணிகளில் பொது மக்களை எளிதில் அணுகி விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ தொண்டு  நிறுவன பிரதிநிதிகளை ஈடுபடுத்த  உத்தரவிட்டுள்ளார் அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 2000 குடிசைப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில் 2500 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு 23-5-2020 முதல் பணிகளை  துவங்க உள்ளதாக மாண்புமிகு  நகராட்சி நிர்வாகம், ஊராட்சி வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் தெரிவித்தார். 

அதைத்தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டலம் வார்டு-125   நொச்சி நகர் பகுதியில் மாநகராட்சியுடன் இணைந்து டான் பாஸ்கோ அன்பு இல்லம் எனும் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோன வைரஸ் தொற்று தடுப்புப் பணிகளை சிறப்பு அதிகாரி வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் இன்று ஆய்வு செய்து , அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் முகவரிகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் .  பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் பற்றிய 33 முதல் 36 வார்டுகளில் மட்டும் சற்று அதிகமாக காணப்படுகிறது, 164 வார்டுகளில் குறைந்த அளவிலேயே வைரஸ் தொற்று உள்ளது ,  இந்த வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி நுண்அளவில்  கண்காணித்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களை கொண்ட சிறப்பு குழுக்கள் மற்றும் 500 சுகாதார ஆய்வாளர்களை கொண்ட குழுக்களை தமிழக முதலமைச்சர் அவர்கள் அமைத்துள்ளார். 

வைரஸ் தொற்று பாதித்த ராயபுரம் ,  கோடம்பாக்கம், வளசரவாக்கம் , மற்றும் திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் நுண் அளவில் கண்காணிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .  நேற்றுவரை வைரஸ் தொற்று பாதித்த நபர்களில் 3 ஆயிரத்து 791 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் 97 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்த 2500 களப் பணியாளர்களை கொண்டு வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது.  இவர்கள் சென்னையில் உள்ள 1,979 குடிசை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான அடிப்படை ஒழுக்கங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள் , மேலும் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மறுபயன்பாட்டுடன் கூடிய துணியாலான முகக் கவசங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கபசுர குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வீடுகள்தோறும் சென்று வழங்குவார்கள் .  எளிதில் நோய்வாய்ப்பட கூடிய 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் , கர்ப்பிணிப் பெண்கள் ,  உயர் ரத்த அழுத்த நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோய் பாதித்த நபர்கள் ஆகியோரை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி புரிதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள் .

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 8 லட்சம் நபர்கள் உள்ளனர் , இதில் சுமார் 2 லட்சம் நபர்கள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பல்வேறு உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் , இவர்களின் உடல் நலன் குறித்தும்  அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளையும் கொண்டு சேர்க்க உதவி செய்வார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு சிகிச்சை பெறும் சுமார் 1.75 லட்சம் நபர்களின் பட்டியல் மருத்துவர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது ,  மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகளை வழங்கி அவ்வப்போது அவர்கள் உடல்நிலை குறித்து கேட்டு அறிவார்கள் , இந்தப் பணிகள் சென்னையில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளிலும் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.