தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு ஒத்திகை நாளை நான்கு மாவட்டங்களில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் சுகாதாரத்துறை சார்பில் செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சமீபகாலமாக வைரஸ் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளின் ஆராய்ச்சிகளும் நிறைவுபெற்று அது மக்களின் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கி இந்தியாவில் புனேவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்ட் தடுப்பூசி இறுதிக்கட்டத்தில் உள்ளது. எனவே முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் சுமார் 30 கோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசிகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

எந்த குழப்பமும் இல்லாமல் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வதற்காக பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் இரண்டு நாட்கள் ஒத்திகை நடைபெற்றது. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணிகளுக்கான தயார் நிலை தொடர்பாக மாநில சுகாதார துறை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். தடுப்பூசி போடும் பணிகளுக்கு, மாநில அரசுகள் செய்துள்ள ஏற்பாடுகள் குறித்தும், அந்தந்த மாநில சுகாதாரத் துறைச் செயலாளர்கள் அப்போது விளக்கமளித்தனர். அதன் பின்னர் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தடுப்பூசி போடும் பணிக்கு தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வரும் ஜனவரி 2ஆம் தேதி (நாளை) நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடத்த வேண்டும் எனவும், மாநில தலைநகரங்களிலும் இந்த ஒத்திகை மூன்று கட்டங்களாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு இடங்களில் தடுப்பூசி  ஒத்திகை நடைபெறும் என  சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். ஓரிரு நாளில்  கோவிஷீல்ட் தடுப்பூசியில் அவசர பயன்பாட்டிற்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்பட்டு விடும் என தகவல்கள் வெளியாகி வரும்நிலையல் நாளை நாடு முழுவதும் ஒத்திகைநடைபெற உள்ளது.

ஒவ்வொரு மாநில தலைநகரங்களிலும் குறைந்தது மூன்று இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாளை நடைபெற உள்ள தடுப்பூசி ஒத்திகைக்கு சுகாதாரத்துறை தயாராக உள்ளது எனவும், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் அரசு பொது மருத்துவமனை, ஈக்காட்டுதாங்கல், சாந்தோம் ஆகிய இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் இடங்கள் அனைத்தும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் பின்பற்றப்படுகின்றன.