கொரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த சில தினங்களில் தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து முடிந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும் பிரிட்டனில் உருவான புதிய வகை வைரஸ் ஒட்டுமொத்த உலக  நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. அது இந்தியாவிலும் தென்பட தொடங்கியுள்ளது. அதேபோல் கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை என உருவாக வாய்ப்புள்ளதால், தடுப்பூசி என்பது தவிர்க்க முடியாததாகி உள்ளது. இந்நிலையில் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

அதேநேரத்தில் ஒருபுறம் நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் தேதி முதற்கட்ட ஒத்திகை நாடு முழுவதும் 125 மாவட்டங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பு ஒத்திகை ஒரே நேரத்தில் நடைபெற்றது.  இந்நிலையில் இன்று நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள 2300 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் இரண்டாவது கட்ட ஒத்திகை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களும் ஒத்திகை நடத்தி பார்க்கப்பட்டது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 இடங்கள் வீதம் மொத்தம் 190 இடங்களில் தடுப்பூசி சோதனை நடத்தப்பட்டது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேரில் பார்வையிட்டார். இந்நிலையில்இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஹர்ஷவர்தன் கூறியதாவது: 

நம்மிடம் தற்போது இரண்டு கொரோனா தடுப்பூசிகள் அவசர காலத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி ஒத்திகை சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. எனவே தடுப்பூசி போடும் பணி அடுத்த சில நாட்களில் தொடங்கும். முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் முன் களப்பணியாளர்கள் முதியவர்கள் பல்வேறு வியாதிகளால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. போலியோவை விரட்டியது போல கொரோனாவையும் விரட்டுவோம். வருங்காலங்களில் நகரம் முதல் கிராமங்கள் வரை தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தடுப்பு பணியில் சிறந்த பங்களிப்பை தமிழக அரசு வழங்கியதை வெகுவாக பாராட்டுகிறேன். தமிழகத்தில்தான் நூறு சதவீதம் ஆர்டிபிசிஆர் முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.