மதுரையில் ஒரு சில தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு பல லட்சங்களை பிடுங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை நிருபிக்கும் வகையில் பிரபல தனியார் மருத்துவமனை 6லட்சத்தை கொரோனா நோயாளியிடம் இருந்து பிடுங்கியிருக்கிறது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 மதுரை அக்ரினி அப்பார்ட்மெண்ட் அருகே இருக்கும் லட்சுமணன் மல்டி ஸ்பெஷலிஸ்ட் மருத்துவமனைக்கு தமிழக அரசு கொரோனா சிகிச்சை அளிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 3 ஆம் தேதி "நேமிசந்த்" என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.பிறகு 14ஆம் தேதி கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், பதிவு கட்டணம் இரண்டாயிரம் என ஆரம்பித்து, ஒரு நாளைக்கு ரூம் வாடகை என்ற கணக்கில் 5ஆயிரம் வீதம் 12 நாளுக்கு 60 ஆயிரம் ரூபாயும், பிபிஇ கிட் ஒன்றுக்கு 2ஆயிரம் என 96 கிட்களுக்கு ஒரு லட்சத்து 92 ஆயிரம் உள்பட 6 லட்ச ரூபாய் அந்த மருத்துவமனை கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


இதேபோன்று தத்தனேரி அருகே இருக்கும் இன்னொரு தனியார் மருத்துவமனையும் இதே கொள்ளையில் ஈடுபட நோயாளிகளின் உறவினர்கள் அந்த மருத்துவமனையில் கரச்சலை ஏற்படுத்த மருத்துவமனையின் மருத்துவரோ உயிரை பணயம் வைத்து நோயாளிகளை கவனிப்பதாகவும் உயிரை காப்பாற்றி தருகிறோம் என்றும் நாங்கள் வாங்கும் பணம் முழுவதும் எங்களுக்கு இல்லை... என்று பொடி வைத்து பேசியிருக்கிறார். இந்த மருத்துவமனையும் 6லட்சத்துக்கு மேல் பணத்தை வாங்கிக்கொண்டு வெறும் 2.70ஆயிரத்துக்கு மட்டும் பில் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை என்கிற பெயரில் அடிக்கும் கொள்ளைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது. சாப்பாடு தங்கும் ஹோட்டல் கொரோனா கிட் முதல் அனைத்திலும் கமிசன் கொள்ளையடிக்கிறார்கள். இதையெல்லாம் எங்கே போய் சொல்லுவது என்று தெரியாமல் விழி பிதுங்கிபோய் நிற்கிறார்கள்.