தொடர்ந்து பாஜகவின் முக்கிய அரசியல் தலைவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில்,  தனக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும், அதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும்  தமிழக பாஜக  மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. சென்னையில் உக்கிரமாக இருந்து வந்த கொரோனா, தற்போது ஒரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் காவலர்கள், சுகாதாரத் துறையினர், துப்புரவு பணியாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதுவரை தமிழகத்தில் 2,57,613 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 4,132 பேர் இதுவரை வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களில் ஒருவருமான நயினார் நாகேந்திரன் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்!!  எனக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பதுப் போல உள்ளதால்,  மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் என் சுற்றத்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும், நானே என்னை தனிமைப்படுத்தி கொள்கிறேன். கந்த சஷ்டி கவசத்தை கையோடு எடுத்து செல்கிறேன். வேலுண்டு வினையில்லை. முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் இவ்வாறு பதிவிட்டுள்ளார். 

முன்னதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா,  கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்  நயினார் நாகேந்திரனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல்  நாகை எம்.பி செல்வராஜ் மற்றும் 20க்கும் மேற்பட்ட தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.