திட்டக்குடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கணேசன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தொகுதி எம்.எல்.ஏ செங்குட்டுவன் ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. களத்தில் நின்று பணியாற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்களை தொடர்ந்து கொரோனா பதம் பார்த்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். 

இதனால் அமைச்சர்களும் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ஆகியோருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், செஞ்சி தொகுதி திமுக எம்எல்ஏவும் குணமடைந்துள்ளார்.

 

இந்நிலையில், கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து எம்.எல்.ஏ கணேசன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ளார்.

அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்ட திமுக எம்.எல்.ஏ செங்குட்டுவனுக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பரிசோதனையின் முடிவுகள் வெளியான நிலையில், எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உடனடியாக எம்.எல்.ஏவை ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தடுத்து கொரோனா எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்டு வருகிறது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.