இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா என மார்தட்டி வந்தனர். அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். தமிழகத்திலும்கூட கம்யூனிஸ்டுகள் கேரளாவை கொரோனா விஷயத்தில் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி வந்தன. 

அப்போது தமிழகம் கொரோனா தொற்று பாதித்த மாநிலங்களில் 3, அடுத்து 2 வது இடத்தில் இருந்தது. அப்போது பலரும் பலவகையான விமர்சனங்களை ஏவி வந்தன. ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். ஆரம்ப காலத்தில் கட்டுப்பாட்டில் இருந்த கொரோனா வைரஸ் தற்போது கேரளாவில் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 5 ஆயிரத்து 537 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 08 ஆயிரத்து 858 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 78 ஆயிரத்து 694 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 119 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,796 ஆக அதிகரித்துள்ளது. 

வழக்கம் போல கொரோனா பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தும், கேரளா 2ம் இடத்திலும் இருக்கிறது. ஆனால், அனைவராலும் விமர்சிக்கப்பட்டு வீணாக குறைசொல்லப்பட்டு வந்த தமிழகம் 10 ம் இடத்தில் உள்ளது. இவையெல்லாம் தமிழக அரசு எடுத்த உறுதியான நடவடிக்கையால் நிகழ்ந்த சாதனை. அப்போது தமிழக அரசை கடுமையாக விமர்சித்த, அரசியல்வாதிகளும், நடுநிலையாளர்களும் இப்போது தமிழக அரசை மெச்சி வருகின்றனர். ஆனால், கம்யூனிஸ்டு கட்சியினர் மவுனம் சாதித்து வருகின்றனர். தமிழக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்த கம்யூனிஸ்டுகள் இப்போது கேரள அரசை விமர்சிப்பதுதான் நியாயம். எங்கே போனார்கள் அந்த கம்யூனிஸ்டுகள்..?