இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருந்ததால் இந்தியாவிலிருந்து ஒருவார காலத்திற்கு மேல் இறக்குமதியை தடை செய்துள்ளதாக  சீனா சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.  கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. ஆரம்பத்தில் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்ட சீனா, அதிலிருந்து மெல்ல மீண்டு தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. அந்நாட்டில் இதவரை 80 ஆயிரத்து 786 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 4634 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார ஆணையம்  தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் அந்நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் வடக்கில்  நடத்திய ஆய்வில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், ஷாங்காயில் 5 பேரும்,  குவாங் டாங்கில் 4 பேரும்  ஷாங்க்சியில் 2 மற்றும் தியான்ஜின் மற்றும் சிச்சுவான் ஆகிய இடங்களில் தலா 1 என நோய்த் தொற்று பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உள்நாட்டில் இருந்து யாருக்கும் வைரஸ் பரவவியில்லை என்றாலும் பாதிக்கப்பட்ட அனைவருமே வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.  மீண்டும் அந்நாட்டில் வைரஸ் தொற்று உருவாகிவிடக் கூடாது என்பதில் அந்நாட்டு அரசும், சுகாதாரத்துறையும் மிக கவனமாக இருந்து வருகிறது. எனவே பரிசோதனையை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் அந்நாட்டின் 24 மாகாணங்களில் 2. 98 மில்லியன் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

இதில் 6 லட்சத்து 70 ஆயிரம் குளிர் சங்கிலி உணவு அல்லது பதனிடப்பட்ட உணவு வகைகள் மற்றும் அது சார்ந்து பணியாற்ற 1.24  மில்லியன் ஊழியர்கள் மத்தியில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 1.07  மாதிரிகள் அதன் சுற்றுச்சூழலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இந்நிலையில்  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்களின் வெளிப்புற பேக்கேஜ் களிலிருந்து எடுக்கப்பட்ட 3 மாதிரிகளில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் இந்தியாவின் பாசு  இன்டர்நேஷனல் நிறுவனத்திடமிருந்து மீன்கள் இறக்குமதியை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைப்பதாக சீனாவின் சுங்க அலுவலகம் வெள்ளிக்கிழமைஅறிவித்துள்ளது. 

ஒரு வார காலம் கழித்து இறக்குமதி மீண்டும் தொடங்கும் என்றும், சுங்க பொது நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த வாரம் இந்தோனேஷிய நிறுவனமான பி.டியின் இறக்குமதியையும் நிறுத்துவதாக சீனா சுங்கத்துறை அலுவலகம் தெரிவித்திருந்தது. மீன்களின் மாதிரிகளில் கொரோனானா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மீண்டும் ஒரு வார காலத்திற்கு பின்னர் இறக்குமதி தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.