தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் உள்ளார். பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக அவா் பங்கேற்பதில்லை. இந்நிலையில், வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவா் மணப்பாக்கத்தில் உள்ள  தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவப் பரிசோதனையில் விஜயகாந்திற்கு லேசான அறிகுறியுடன் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து விஜயகாந்துக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் அவரது இரண்டு மகன்களுக்கும் கரோனா வைரஸ் குறித்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் மருத்துவப் பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக விஜயகாந்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜயகாந்தின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியிருந்த நிலையில், மருத்துவமனை நிர்வாகமோ நோய் தொற்று உறுதி என்று அறிவித்துள்ளது. விஜயகாந்த் உடல்நலம் குறித்து மாறுபட்ட தகவல்களால் தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அவர் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கொரோனா தொற்று என்ற தகவல் ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.