குவைத்தில் இருந்து சிறப்பு விமானத்தில் வந்த பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

கொரோனா வைரஸ் காரணமாக உலகத்தில் பல்வேறு நாடுகளில் தங்கி உள்ள இந்தியர்கள் தாயகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர்.  மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்திலும்,  தனியார் ஏஜென்சிகள் முலமாகவும் 56 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சென்னை வந்தனர். இன்று இரவு குவைத்தில் இருந்து தனியார் ஏஜென்சி முலமாக 40 பெண்கள் உள்பட 309 பேர் சென்னை வந்தனர். 

இவர்களிடம் இருந்து தனியார் ஏஜென்சி விமான டிக்கெட் மற்றும் தனியார் ஒட்டல்களில் தனிமைப்படுத்தி கொள்ளவும், கொரோனா பரிசோதனைக்கும் சேர்த்து ஒருவருக்கு என தலா ரூ.65 ஆயிரம் பணம் பெற்று அழைத்து வரப்பட்டனர். ஆனால் சென்னையில் தரையிறங்கியதும் தனிமைப்படுத்த தனியார் ஒட்டலுக்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டது. உடனே விமானத்தில் வந்த பயணிகள் தங்களிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக கூறி கோஷம் போட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

உடனே விமான நிலைய போலீசார் விரைந்து பயணிகளிடம் பேசினார்கள். அப்போது குவைத்தில் கூலி தொழிலாளியாக வேலைக்கு சென்று 3 மாதமாக வருமானம் இல்லாமல் கடன் வாங்கி வந்த தங்களை ஏமாற்றி விட்டதாக அவர்கள் கூறினார். தனியார் ஏஜென்சி மீது புகார் தந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர் 29 பேர் தங்கள் பணத்தை செலுத்தி ஒட்டலுக்கும் 280 பேர் தனியார் கல்லூரிக்கும் சென்றனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.