நோய்ப்பரவலை தடுக்க தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுகின்றனர்; ஆனால் அரசு சிறப்பாக செயல்படுகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்:- சிறப்பான நடவடிக்கை மூலம் காஞ்சிபுரத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக போதுமான அளவிற்கு மருத்துவமனைகள் உள்ளன. வீடுவீடாக சென்று ஆய்வு நடத்தியதால் கொரோனா பரவல் தடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரம் வரை இருந்தது தற்போது குறைந்துள்ளது. 

மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்டங்களாக இருப்பதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் நோய் பரவல் அதிகம் இருந்தது. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் காய்ச்சல் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவமனைகள் உள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் நோய் தொற்று வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும், பேசிய முதல்வர் தமிழகத்தில் 80 சதவீதம் மக்கள் மருந்தே இல்லாமல் குணமடைந்து வீடு திரும்புகின்றனர். அரசு மீது காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவிக்கின்றனர். நோய்ப்பரவலை தடுக்க தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுகின்றனர்; ஆனால் அரசு சிறப்பாக செயல்படுகிறது. சிறந்த மருத்துவ சிகிச்சை காரணமாக இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. முன்களப் பணியாளர்களை எதிர்க்கட்சியினர் கொச்சைப்படுத்தக்கூடாது. அரசின் பணிகளை பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, குறை சொல்லாதீர்கள். 

மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா கட்டுக்குள்வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். அறிகுறி உள்ளவர்களுக்கு உடனே ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.