மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
டெல்லி அருகே குர்கவானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் தர்மேந்திர பிரதான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் 2-வது அமைச்சர் தர்மேந்திர பிரதான். ஏற்கெனவே உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தர்மேந்திர பிரதான் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு கொரோனா வைரஸுக்கான அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து நான் பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் நலமுடன் இருக்கிறேன். இருப்பினும் மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்”எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர்கள் இருவருக்கு கொரோனா இருப்பதுஉறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைத்து அமைச்சர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் ஷெகாவத் கரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தன்னை தனிமப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தர்மேந்திர பிரதான் பங்கேற்கவில்லை என்றாலும், கூட்டம் முடிந்தபின் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசியிருந்தார்.