கொரோனா பாதித்தால் வீட்டிலேயே சிகிச்சை பெறலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதித்தவர்களுக்கு வேறு எந்த இணை நோயும் இல்லாவிட்டால் அவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெறலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதற்கான அனுமதிக்கப்பட்டுள்ள முகாம்களிலும்  பாதிப்படைந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

 

இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பாதிப்பு ஏற்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி முதற்கட்டமாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 40 வயதிற்கு கீழ் உள்ளவராக இருந்தால் அவருக்கு வேறு இணை நோயும் இல்லை என்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.

 

பாதிக்கப்பட்டவரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது கட்டுப்பாட்டு அறையில் இருந்து மருத்துவர்கள் கேட்பார்கள், வீட்டில் சிகிச்சை பெறுபவர்கள் ரூபாய் 2500 கட்டணம் செலுத்த வேண்டும், அதற்காக அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி, ஆக்சி மீட்டர் கருவி, மருந்துகள் போன்றவை வழங்கப்படும். மேலும் எந்தெந்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். பத்து நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும். முதல்கட்டமாக இரண்டு பேர் வீட்டில் தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.