தமிழகத்தில் நீண்ட காலமாக நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று மளமளவென அதிகரித்து வருகிறது. அந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா எனும் கொடிய தொற்று நோய் மிக வேகமாக பரவி லட்சகணக்கான உயிர்களை பலி வாங்கவருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தமிழக மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது,  தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இதனால் தமிழகம் முழுவதும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71 ஆயிரத்தை எட்டியுள்ளது.  கடந்த மூன்று நாட்கள் மட்டும் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த சில வாரங்களாக சென்னையில் மட்டுமே நோய் தொற்று அதிகமாக பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பிற மாவட்டங்களிலும் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நீண்ட நாட்களாக கிருஷ்ணகிரி மாவட்டம் கொரோனா தாக்கம் இல்லாமல் பச்சை மண்டலமாகவே  இருந்து வந்தது. ஆனால் சென்னை காய்கறி மார்க்கெட்டுக்கு சென்று வந்த சூளகிரியை சேர்ந்தவர் மூலம்  மாவட்டத்தில் முதல் நோய் தொற்று கண்டறிபட்டதால்,  பச்சை மண்டலம் என்ற சிறப்பை இழந்தது கிருஷ்ணகிரி. 

இதனையடுத்து  மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கொரோனா தாக்கம் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இரட்டை இலக்கமாக இருந்த நோய் தொற்று இன்று 101 என்ற எண்ணிக்கையை எட்டி சதம் அடித்தது. இதனையெடுத்து மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளில் 22 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. மேலும் கிருஷ்ணகிரி நகரில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் போலீசார் எச்சரித்துவருகின்றனர். தொடர்ந்து ஒலிப்பெருக்கி மூலம் மாஸ்க், கையுறை, சானிடைசர் உள்ளிட்டவைகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே  நோயின் தாக்கம் குறையும் ,இல்லையென்றால் கிருஷ்ணகிரியும் வுஹான் நகரம்போல் மாறிவிடும் என அதிகாரிகள் மக்களை எச்சரித்து வருகின்றனர்.