அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மதுரை திண்டுக்கல் விருதுநகர் திருநெல்வேலி பகுதிகளில் கொரோனா தொற்று குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்த சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் வரை கலக்கமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க் கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றார்கள்.அமைச்சர் செல்லூர் ராஜ் கொரோனா பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்துள்ளார். 

அதிமுக திமுக எம்எல்ஏக்களை சுற்றி அடிக்கும் கொரோனா மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மாணிக்கத்தையும் விடவில்லை.இவர் கொரோனா ஊரடங்கையொட்டி பல்வேறு பகுதிகளுக்குச் சென்று நலத்திட்ட உதவிகளும், பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களும் வழங்கினார். மேலும் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கொரோனா விழிப்புணர்வு பணிகளிலும் ஈடுபட்டார். இந்த நிலையில் அவருக்கு சளி தொந்தரவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே மாணிக்கம் எம்.எல்.ஏ. அங்கேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.இவரைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான பரமேஸ்வரி முருகன் கடந்த சில நாட்களாக சளி மற்றும் இருமல் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். உடனே அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து  அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவதற்கு முன் மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது மாணிக்கம் எம்எல்ஏவும் கலந்துகொண்டார்.இதனால் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் அதிகாரிகள் வரை கலக்கமடைந்து இருக்கிறார்கள்.