வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் மீதான எஃப்.ஐ.ஆர்ஐ ரத்து செய்த மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை மிகுந்த வரவேற்கத்தக்கது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா வரவேற்றுள்ளது . இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் OMA ஸலாம் தனது அறிக்கையில்,  வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்களுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர்.களை ரத்து செய்த மும்பை உயர் நீதிமன்ற தீர்ப்பை பாராட்டி வரவேற்றுள்ளார்.

மேலும் நீதிபதி டி.வி. நலாவாடே மற்றும் நீதிபதி எம்.ஜி. செவ்லிகர் ஆகியோர் அடங்கிய அமர்வின் இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. இந்திய நீதித்துறையின் சுதந்திரம் கடுமையான கேள்விக்குள்ளான நேரத்தில், இது போன்ற தீர்ப்பு நம்பிக்கையின் புதிய காற்றாக திகழ்கிறது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை தத்துவங்களான நீதி, உண்மை மற்றும் சமத்துவம் ஆகியவற்றில் சமரசமற்ற உறுதிப்பாட்டை இத்தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. 

முழு முஸ்லிம் சமூகமும்  நாட்டில் ஏதேனும் ஒரு  தவறு நடந்தாலும் அல்லது எல்லாவற்றிற்கும் தாங்கள்தான் காரணம் என்ற சூழலை எதிர்கொண்டதை டிவிசன் அமர்வு சரியாக சுட்டிக்காட்டியது. இந்த நேரத்தில்  அவர்கள் நாட்டில் அந்நியப்படுத்தப்பட்டு "நோய்பரப்பிகளாக" பிரச்சாரம் செய்யப்பட்டனர். துரதிருஷ்டவசமாக ஒரு தொற்றுநோய் நம் நாட்டில் வகுப்புவாதப்படுத்தப்பட்டு அரசியல் மயமாக்கப்பட்டது. இது சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தை சேதப்படுத்தியது. டிவிஷன் அமர்வு மேற்கொண்ட அவதானிப்புகள் வகுப்புவாத அரசியலுக்கு ஒரு அடியாகும். இந்தத் தீர்ப்பு ஊடகங்களின் ஒரு பகுதியினரின் பங்கையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இஸ்லாமோபோபியாவை ஊக்குவிக்க அவர்கள் ஊடக வாய்ப்பைப் பயன்படுத்தினர். இந்த பிரச்சாரம் சந்தேகத்திற்கு இடமின்றி பயம், சந்தேகம், இனவெறி ஆகியவற்றை உருவாக்கியது. 

இவ்வாறு கட்டமைக்கப்பட்ட வெறுப்பு அப்பாவிகளைத் தாக்க கும்பல்களைத் தூண்டியது. இந்தியா முழுவதும் அப்பாவி முஸ்லிம் வழிப்போக்கர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் குறிவைக்கப்பட்டனர். நீதி மீதான அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இந்த தீர்ப்பு நிச்சயமாக உதவும். வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மற்றும் தவறான பிரச்சாரங்களுக்காக பல்வேறு செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகள் ஆகியோர் ஊடகங்கள் மற்றும் தனிநபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்த தீர்ப்பின் வெளிச்சத்தில், வகுப்புவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு அமைதி மற்றும்  நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டுமென நீதிமன்றங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோரிக்கை விடுக்கிறது. என OMA ஸலாம் தெரிவித்துள்ளார்.