கொரோனா வைரஸால் இதற்கு முன்பு இல்லாத அளவில் ஒரே நாளில் 4,591 உயிரிழந்ததால் அமெரிக்காவில் மக்களிடையே பெரும் பீதி நிலவிவருகிறது.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸால் வல்லரசு நாடான அமெரிக்க மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்காணோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுவருகிறார்கள். இதேபோல உயிரிழப்புகள் எக்குத்தப்பாக எகிறிவருகின்றன. அமெரிக்காவில் இதுவரை 7.10 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனலிக்காமல் 37,158 பேர் உயிரிழந்துள்ளனர். 
இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 29 ஆயிரம் பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டது. இதேபோல மிக அதிகபட்ச உயிரிழப்பும் நேற்று பதினாவது. நேற்று மட்டும் அமெரிக்காவில் 4,591 பேர் பலியானார்கள். இதற்கு முன்பு அமெரிக்காவில் ஒரே நாளில் 2,569 பேர் உயிரிழந்தது அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்த எண்ணிக்கை நேற்று இரட்டிப்பானதால் அமெரிக்க மக்கள் சோகத்திலும் பீதியிலும் ஆழ்ந்துள்ளனர். அமெரிக்காவில் நியூயார்க் நகரில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 3,778 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.