தனது சகோதரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான கங்குலி வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

கங்குலி மேற்கு வங்க மாநிலம், பெகலாவில் உள்ள தனது பூர்வீக வீட்டில் வசித்து வருகிறார். கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள். அவரது மூத்த சகோதரரும் பெங்கால் கிரிக்கெட் சங்க இணை செயலாளருமான ஸ்னேகாசிஷ் மொமின்பூரில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஸ்னேகாசிஷ் மனைவி மற்றும் மாமனார், மாமியாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பின்னர் ஸ்னேகாசிஷ், கங்குலியின் வீட்டுக்கு வந்து அவருடன் வசித்து வந்தார்.


 
இந்நிலையில், ஸ்னேகாசிஷும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே வீட்டில் இருந்ததால் கங்குலி தன்னை தனிமை படுத்திக் கொண்டார். 

இதுகுறித்து கங்குலி பேசுகையில், ’’நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து என்னைச் சுற்றியுள்ள வாழ்க்கை  மாறி விட்டது. எங்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளுக்கு சகோதரர் தினமும் சென்று வந்ததால் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம். கொரோனா பாதிப்பினால் பலர் வெளியே பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழ்நிலையைப் பற்றி மிகவும் வருத்தப்படுகிறேன். இந்த தொற்றுநோயை எவ்வாறு தடுப்பது? என்று தெரியாமல் இன்னும் தடுமாறுகிறோம்.

 

உலகெங்கிலும் உள்ள இந்த சூழ்நிலை என்னை மிகவும் பாதித்தது. இது எப்படி, எப்போது, எங்கிருந்து வந்தது என்பது நமக்குத் தெரியாது. அதனால் நாம் தயார் நிலையில் இல்லை. எதிர்கொள்ளவும் வழிமுறைகளை கண்டறிய முடியவில்லை’’என அவர் வருத்தப்பட்டுள்ளார்.