சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் முதல்வர் மற்றும் எதிர்க்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருப்பவர் ஜி.லோகநாதன். இவர் தற்போது நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத் தொடருக்கு செல்வதற்கு முன்பாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, கடந்த 14ம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் அவர் கலந்துகொண்டார். பின்னர், அன்று இரவே திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில், அடுத்த இரண்டு நாட்கள் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் லோகநாதன் கலந்துகொள்ளவில்லை. பின்னர், வேலூர் திரும்பிய அவர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவருடைய குடும்பத்தினருக்கும் தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.