வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது திமுக தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன் கொரோனா பாதிப்பால் இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

திமுகவின் மாவட்ட நிர்வாகம், வடசென்னை மற்றும் தென் சென்னையாக செயல்பட்டது. அப்போது வடசென்னை திமுக மாவட்ட செயலாளராக இருந்தவர் எல். பலராமன். திமுகவில் இருந்து வைகோ வெளியேற்றப்பட்ட நிலையில் பிளவை சந்தித்தது. அப்போது வடசென்னையில் திமுகவை கட்டிக் காத்தவர்களில் எல். பலராமன் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டு திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உயிரிழந்த நிலையில் மற்றொரு உயிரிழப்பு கட்சியினருக்கு இடையை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, எல். பலராமன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்;- வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான  எல்.பலராமன் அவர்கள் கோவிட்-19 நோய்த் தொற்றால், இன்று காலை மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் நான் மீளாத் துயரத்திற்கும், சோகத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் சென்னை மாநகரின் முன்னணிக் கள வீரர்களில் ஒருவராகவும், துறைமுகம் பகுதிச் செயலாளராகவும் அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறந்திட முடியாது. அவர் கழகத்தின் ஒரு கடின உழைப்பாளி. கட்சிப் பணியோ, தேர்தல் பணியோ, மக்கள் பணியோ - அனைத்திலும் விறுவிறுப்புடன் களத்திற்கு வரும் அவர், போராட்டம் என்றால் போராளியாகவே மாறி களத்தில் நிற்கும் தைரியசாலி. அவர் மறைந்தாலும்- அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது. எல்.பலராமன் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், அனைத்து கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.