சென்னையில் கொரோனா பாதிப்பால் திமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகிறது. சென்னையில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. ஆனால், விருதுநகர், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் எஸ்.ரத்தினம் (62) ஆலந்தூர் தெற்கு பகுதி தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக இருந்தவர்.  கடந்த 10 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று ரத்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதேபோல், புழுதிவாக்கத்தை சேர்ந்த திமுக முன்னாள் கவுன்சிலரும், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் கமலநாதனின் தந்தையுமான பாலசுந்தரம் (66) கொரோனாவால் பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று அதிகாலை சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர்களின் குடும்பத்தினருக்கு தி.மு.க. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தாமோ அன்பரசன் எம்.எல்.ஏ., ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.