கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த உத்தரபிரதேச மாநில அமைச்சர் கமலா ராணி வருண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீயாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 37,364 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 853 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11,45,629 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 5,67,730 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை மொத்தம் 17,50,723 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 54,735 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

முக்கியமாக கொரோனா எதிரான போரில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் தொழில்நுட்பக் கல்வி அமைச்சராக இருந்த கமல் ராணி வருண் கடந்த ஜூலை 17ம் தேதி கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து லக்னோவில் உள்ள PGI மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் இன்று அயோத்தி சென்று ராமர் கோவில் பூமி பூஜை குறித்து ஆய்வு செய்ய இருந்தார். அமைச்சர்  உயிரிழந்ததை தொடர்ந்து அயோத்தி பயணத்தை ரத்து செய்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த முதல் அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.