கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடகாவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி அசோக் கஸ்தி சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவில் மாநில முதல்வர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அதேபோல், ஒடிசா, அசாம், உத்தரப் பிரதேசம், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கொரோனாவில் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டுள்ளனர். இதில், சிலர் மட்டுமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,  கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடகா பாஜக எம்.பி அசோக் கஸ்தி செப்டம்பர் 2ம் தேதி பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.  நேற்று திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பல்லி துர்காபிரசாத் ராவ் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் இன்று  பாஜக எம்.பி அசோக் கஸ்தி உயிரிழந்திருப்பது அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழந்த எம்.பி.க்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் சமீபத்தில் நடந்த மாநிலங்களை தேர்தலில் அசோக் கஸ்தி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.